இந்திய பெண்கள் கலக்கல் வெற்றி * வீழ்ந்தது இங்கிலாந்து அணி

சவுத்தாம்ப்டன்: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில், இங்கிலாந்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சிவர் பிரன்ட், பேட்டிங் தேர்வு செய்தார்.
சோபியா அரைசதம்
இங்கிலாந்து அணிக்கு டாம்மி (5), அமி (1) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. இருவரையும் கிராந்தி வெளியேற்றினார். எம்மா லாம்ப் (39), ஸ்னே ராணா சுழலில் சிக்கினார். தொடர்ந்து அசத்திய ஸ்னே ராணா, நாட் சிவரையும் (41) அவுட்டாக்கினார். இங்கிலாந்து அணி 97/4 ரன் என திணறியது.
பின் இணைந்த சோபியா, அலைஸ் ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். 4வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்த போது அலைஸ் (53) அவுட்டானார். 83 ரன் எடுத்த சோபியா, அமன்ஜோத் கவுர் பந்தில் போல்டானார். இங்கிலாந்து அணி, 50 ஓவரில் 258/6 ரன் எடுத்தது. சோபி (23) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் கிராந்தி, ஸ்னே தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
தீப்தி அபாரம்
இந்திய அணிக்கு பிரதிகா (36), ஸ்மிருதி (28) ஜோடி துவக்கம் தந்தது. ஹர்லீன் 27 ரன் எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (17) அவுட்டாக இந்திய அணி 124/4 என திணறியது. அடுத்து 137 பந்தில் 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜெமிமா, தீப்தி இணைந்தனர். வழக்கத்துக்கு மாறாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் தீப்தி.
இவர் 52 பந்தில் அரைசதம் எட்டினார். 5வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்த போது, ஜெமிமா (48) அவுட்டானார். ரிச்சா (10) ஏமாற்றினார். பின் வந்த அமன்ஜோத், கிராஸ் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாச இந்திய அணி, 48.2 ஓவரில் 262/6 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. தீப்தி (62), அமன்ஜோத் (20) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
நான்காவது முறை
இங்கிலாந்து மண்ணில் இந்திய பெண்கள் அணி தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்தது. கடந்த 2022 தொடரில் 3-0 என இங்கிலாந்தை சாய்த்தது இந்தியா. தற்போது முதல் போட்டியில் வென்றுள்ளது.
4500 ரன்
நேற்று 28 ரன் எடுத்த ஸ்மிருதி, ஒருநாள் அரங்கில் 4500 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 103 போட்டியில் 4501 ரன் எடுத்துள்ளார். மிதாலி ராஜுக்கு (232ல் 7805 ரன்) அடுத்து இந்த இலக்கை கடந்த இந்திய வீராங்கனை ஆனார் ஸ்மிருதி.
மேலும்
-
பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியில் விஜய்இணைவார் என்ற நம்பிக்கை இல்லை சொல்கிறார் கார்த்தி எம்.பி.,
-
உமையநாயகி அம்மன் கோயிலில் ஆடி முழுவதும் நடை அடைப்பு
-
குருவாயூர் - -மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
-
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
-
'நிபா'வை தொடர்ந்து பரவுது பன்றிக்காய்ச்சல்
-
குடிநீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி