அச்சுறுத்தும் மரங்கள்; குடிமகன்களால் முகம் சுளிப்பு கொடைக்கானல் 11 வது வார்டில் தொடரும் அவலம்

கொடைக்கானல்: அச்சுறுத்தும் மரங்கள், குடிமகன்களால் முகம் சுளிப்பு என கொடைக்கானல் நகராட்சி 11 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
அந்தோணியார் கோயில், நாய்ஸ் ரோடு, செம்மேரீஸ் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், சலேத் மாதா ஆலயம் உள்ளன. குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு மாடுகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சரிவர அள்ளப்படாத குப்பையால் நோய் தொற்று ஏற்படுகிறது. குடிமகன்களால் தினமும் முகம் சுளிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர், பஸ்ஸ்டாண்டை பார்க்கிங்காக பயன்படுத்தும் போக்கால் பஸ்கள் நின்று செல்ல இடையூறு ஏற்படுகிறது.ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் போக்குவரத்து இடையூறு உள்ளது.
சுகாதாரக்கேட்டிற்கு மத்தியில் வார சந்தை
மல்லிகா, குடும்பத்தலைவி : உட்வில் ரோட்டிலிருந்து அந்தோணியார் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குறுக்கு படிக்கட்டை குடிமகன்கள் பாராக பயன்படுத்தும் போக்கால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
அருகில் மாற்றுத்திறனாளிகள் உண்டு உறைவிட தங்கும் விடுதி செயல்படும் நிலை உள்ளது. ஆலய பகுதியில் செயல்படும் நகராட்சி சுகாதார வளாக பராமரிப்பு பணிகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் வாகனங்களில் மறைவில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர்.
ரோட்டில் தற்காலிக வார சந்தை சுகாதாரக்கேட்டிற்கு மத்தியில் செயல்படும் அவலம் உள்ளது.
மரங்களை அகற்ற வேண்டும்
சுதாகர், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி : போக்குவரத்து நிர்வாக இடத்தில் நகராட்சி தற்காலிக பார்க்கிங் வசதி செய்து கொடுத்த போதும் உட்வில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதால் இடை யூறு ஏற்படுகிறது. பஸ்ஸ்டாண்டில் பஸ் தவிர்த்து பிற வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். வார்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்க சிசிடிவி அமைக்க வேண்டும்.
குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு மாடுகளால் அச்சுறுத்தல் உள்ளது. கோக்கர்ஸ்வாக் வரும் சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் பார்த்து அந்தோணியார் ஆலயம் தெருவிற்கு வந்து செல்லும் நிலையால் பயணிகள் அலைக்கழிப்பால் பாதிக்கின்றனர். தனியார் விடுதி கழிவுநீர் குடிநீர் ஊற்றுப்படுகையில் வருவதால் தண்ணீர் மாசடைகிறது. போக்குவரத்து கழக இடம் ,குடியிருப்பு பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.
அரசு நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு
இருதயராஜா ,கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : இதுவரை ரூ. 4 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. காட்டுமாடு நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிவிஞ்ச் சலேத் மாதா ஆலயம் இடையே உள்ள அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமித்து சுவர் எழுப்பியதால் இப்பிரச்னை நீடிக்கிறது. இதை சரி செய்ய நகராட்சி, வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறுக்கு ரோட்டை பாராக பயன்படுத்தும் போக்கிற்கு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். திறந்த வெளியில் இயற்கை உபாதை தவிர்க்க போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் உள்ள சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். போக்குவரத்திற்கு இடையூறு வாகனங்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். வார்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்கப்படும் என்றார்.
மேலும்
-
இந்திய விமானங்கள் ஆக.24 வரை வான்வெளியில் பறக்கக்கூடாது; பாக்., தடை நீட்டிப்பு
-
இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்
-
செல்லியம்மன் தேர் திருவிழா
-
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு
-
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
-
இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்