காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!

77


தமிழகத்ததின் ஆகச்சிறந்த முதல்வராக கருதப்படும் காமராஜரை திமுக எம்பி திருச்சி சிவா விமர்சித்து பேசிய பிறகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு ஆகியோர் சாதாரண கண்டனத்தைக் கூட தெரிவிக்காதது, காமராஜர் மீது அபிமானம் வைத்துள்ளவர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநாவுக்கரசு மட்டும் மேம்போக்காக, திமுக கட்சியின் பெயரைக் கூட குறிப்பிடாமல், பெயருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு திமுக மீது என்ன பயம் என்று தெரியவில்லை.

இவர்களுக்கு முகவரி தந்ததே அந்த காமராஜர் தான். அந்த நன்றி கூட இவர்களுக்கு இல்லை.

காமராஜர், தமிழகத்தின் ஒரு சாதாரண அரசியல் தலைவர் அல்ல. அனைத்து துறைகளிலும் நம்பர் 1 தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
1. கட்சி வேறுபாடு இன்றி அனைவராலும் மதிக்கப்படுபவர்.
2. தமிழகத்தின் மிகச்சிறந்த முதல்வராக கருதப்படுபவர்.
3. தமிழகத்தில் பிறந்தாலும், அகில இந்திய அளவில் வட இந்திய தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர்.
4. ‛‛கிங் மேக்கர்'' என அழைக்கப்பட்ட ஒரே தலைவர்.
5. கல்வி, தொழில் துறை, வேளாண்மை துறையில் தமிழகம் முதல் இடம் பிடிக்க கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியவர்.
6. அரசியலில் ஒழுக்கம், கட்டுப்பாட்டை பேணிப் பாதுகாத்தவர்.
7. மாற்றுக் கட்சி தலைவர்களைக் கூட மரியாதையுடன் பேசியவர்.
8. ஊழல் இல்லாத, அப்பழுக்கற்ற ஆட்சியை நடத்தியவர் என்று பெயர் வாங்கியவர்.
9. தமிழகத்தின் மிக எளிமையான தலைவராக இருந்தவர்.
10. இந்திரா கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்ததன் மூலம் தேசப்பற்று, ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்று பெயர் எடுத்தவர்.
இப்படிப்பட்ட ஒருவரை திமுக எம்பி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அவதுாறுகளை பரப்பினார். காங்கிரஸ் கட்சியினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோ இல்லையோ ஒட்டு மொத்த தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், காமராஜரை மட்டுமே ஒரே மாபெரும் தலைவராக அனைத்து மக்களும் மதிக்கின்றனர்.

சாதாரண மக்களே கொந்தளிக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் காமராஜர் காலத்தில் வாழ்ந்த ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன்? திமுக கூட்டணி கட்சி என்பதாலா? திமுகவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரசுக்கு அதிகபட்சம் 20 சீட்டுகள் கிடைக்குமா? அதை விடுத்து, ஆட்சியையா காங்., பிடிக்கப் போகிறது.

தமிழகத்தில் காங்., என்று ஒரு கட்சி இருப்பதே காமராஜரால் தான். அவர் பெயரை சொல்லாமல் காங்., கட்சி இருக்க முடியுமா?

புலி வாலை பிடித்த கதையாக திமுகவை பிடிக்கவும் முடியாமல், விடவும் முடியாமல் காங்., தவிக்கிறது. எனவே, திமுக கூட்டணியை விட்டு காங்., பிரிந்து வருவதற்கு இது தான் நல்ல நேரம். திமுக அரசின் ஊழலை கண்டிக்கிறோம் என்று வலுவான ஒரு காரணத்தைச் சொல்லி, காங்., வெளியே வந்தால், அக்கட்சியின் மீது மக்கள் மனங்களில் மதிப்பு உயரும். தேய்ந்து வரும் அக்கட்சியின் வாக்கு வங்கியும் உயரும்.

காங்கிரசை திமுக உடன் வைத்திருப்பதே தாங்கள் செய்யும் தவறுகளையும் ஊழல்களையும் வெளியே சொல்லக் கூடாது என்பதற்காகத் தான். ஏற்கனவே காங்கிரசாரை திமுகவினர் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதை புரிந்துகொண்டு காங்., இனிமேலாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வாசகர்களே எழுதுங்கள்:



வாசகர்களே, காமராஜர் குறித்து திமுக எம்பியின் விமர்சனம் பற்றியும் காங்கிரஸ் நிலைப்பாடு பற்றியும் உங்கள் கருத்துகளை ‛‛கமென்ட்'' பகுதியில் எழுதுங்கள்.

Advertisement