ரோகித் மீண்டும் சாதனை * உலக பல்கலை., விளையாட்டில்

ரினே-ருஹ்ர்: ஜெர்மனியில் 32 வது உலக பல்கலை., விளையாட்டு நடக்கிறது. 114 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் 90 பல்கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். நீச்சலில் ஆண்களுக்கான 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் அரையிறுதி நடந்தது.
இதன் தகுதிச்சுற்றில் 24.00 வினாடியில் வந்து, தேசிய சாதனை படைத்த ரோகித் பெவடிக்சன் (தமிழகம்) களமிறங்கினார். இம்முறை 23.96 வினாடி நேரத்தில் வந்து 6வது இடம் பெற்று, பைனல் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் 24.00 வினாடிக்கும் குறைவான நேரத்தில் கடந்த முதல் இந்தியர் என, தேசிய சாதனை படைத்தார்.
ஆண்கள் 200 மீ., பிரீஸ்டைல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், 5வது தகுதிச்சுற்றில் ஒரு நிமிடம், 48.22 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறினார். தவிர இது புதிய தேசிய சாதனை (இதற்கு 1:48.66 வினாடி) ஆனது.
ஆண்கள் டேபிள் டென்னிஸ் இந்திய அணி குரூப்-3ல் இடம் பெற்றது. கோலம்பியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஹர்குன்வர், தேவர்ஷ், அயாஸ் முராத் வெற்றி பெற்றனர். இந்தியா 3-2 என வென்று, 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது. இந்திய பெண்கள் அணி 3-1 என நெதர்லாந்தை வீழ்த்தி, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தது.
வைஷ்ணவி வெற்றி
டென்னிசில் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, 6-1, 6-0 என நெதர்லாந்தின் மரியா ஜெனியாவை வென்றார். இந்தியாவின் அஞ்சலி ரதி, 6-0, 6-0 என உகாண்டாவின் கிறிஸ்டியாவை சாய்த்தார். ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் கபிர், மான் ஜோடி 6-1, 6-1 என தாய்லாந்தின் மஜோலி, சுபாவத் ஜோடியை வென்றது.