அரும்பார்த்தபுரம் புதிய பைபாசில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

வில்லியனுார்: கண்டமங்கலம் அடுத்த நாவமல்காப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், 54; புதுச்சேரியில் உள்ள தனியார் பாரில் கேண்டீன் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில் வேலையை முடித்துக்கொண்டு, வசூல் பணத்துடன் வீட்டிற்கு 100 அடி சாலை, புதிய பைபாஸ் வழியாக வில்லியனுார் சென்றுகொண்டிருந்தார்.

அரும்பார்த்தபுரம்ஆர்.கே. நகர் பகுதியில் பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் துரைராஜ்யை வழிமறித்து, அவரிடம் இருந்த 21 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

அவ்வழியாக சென்ற மேரி உழவர்கரை, சக்தி நகரை சேர்ந்த கணேஷ் என்பவர், இருவரையும் பிடிக்க விரட்டி சென்றார். அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை அருகே பிடிக்க முயன்றபோது, இருவரும் கணேைஷ தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த ஐபோனையும் பறித்து சென்றனர்.

கணேஷ் புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசாரும், வழிப்பறி குறித்து வில்லியனுார் போலீசாரும் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

வில்லியனுார் போலீசாருடன், புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் இணைந்து அரும்பார்த்தபுரம் பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்தனர்.

அதில் உழவர்கரை, வின்சென்ட் வீதி விமல்ராஜ் மகன் ஜெனாத், 19; புதுநகர் யோகநாதன் மகன் ரிஷிகுமார், 18, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்து, பணம் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement