மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர்

மீஞ்சூர்,:“காட்டுப்பள்ளியில் முடங்கி கிடக்கும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை புதுப்பித்து, விரைவில் பயன்பாட்டிற்கு வரும்,” என, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், 600 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, 2010ல் தமிழக அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

சென்னை குடிநீர் வாரியத்தின் கீழ், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாயிலாக பராமரிக்கப்பட்டு வந்தது. தினமும், 20.37 கோடி லிட்டர் கடல்நீரை உறிஞ்சி, சுத்திகரித்து, 10 கோடி லிட்டர் குடிநீராக மாற்றப்பட்டு, வடசென்னையில் சில பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2019 வரை ஒப்பந்த நிறுவனம், தினமும் திட்டமிடப்பட்ட அளவிற்கு, கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி, சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கி வந்தது.

அதன்பின், ஆலை பராமரிப்பு இல்லாமல், அதன் உற்பத்தி படிப்படியாக குறைந்தது. தொழில்நுட்ப கோளாறுகள், இயந்திரங்கள், மைக்ரோ பில்டர்கள் பழுது, உதிரிபாகங்கள் செயலிழப்பு ஆகியவற்றால், 2024ல், உற்பத்தி திறன் முற்றிலும் முடங்கியது.

அதை தொடர்ந்து, தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, சென்னை குடிநீர் வாரியம் ரத்து செய்தது. 11 மாதங்களாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் முடங்கியுள்ளது.

நேற்று, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, இந்த ஆலையில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, உபகரணங்களை பார்வையிட்டார். பெரும்பாலான உபகரணங்கள் துருப்பிடித்து இருந்தன. பின், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அதன்பின், அமைச்சர் கூறியதாவது:

ஒப்பந்ததாரர் சரியாக செயல்படாதது தான் திட்டம் முடங்கியதற்கு காரரணம். சென்னை குடிநீர் வாரியத்திற்கு முழுமையாக தண்ணீர் வழங்கவில்லை. தற்போது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இது உள்ளது.

மீஞ்சூர் பகுதியில் குடிநீர் தேவை இருப்பதால், ஐந்து அலகுகளில் முதல்கட்டமாக ஒரு அலகை புதுப்பித்து, குடிநீர் பெறுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் முடங்கியதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement