வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

ஆண்டிபட்டி:பெரியாறு அணையில் இருந்து வரும் நீரால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்கிறது.

வைகை அணையில் இருப்பில் இருந்த நீர் ஜூன் 15 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் திறந்து விடப்பட்டு இன்றளவும் தொடர்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கும் ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை 1251 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையிலிருந்து நீர் தொடர்ந்து வெளியேறியதால் ஜூன் 15ல் 61.22 அடியாக இருந்த நீர்மட்டம் ஜூலை 2ல் 59.02 அடியாக குறைந்தது.

அணையில் திறக்கப்படும் நீரின் அளவைவிட தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகம் இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து நேற்று 63.39 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி).

தற்போது வைகை அணைக்கு கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு மூலம் நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 1634 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 969 கன அடி நீர் வெளியேறுகிறது.

Advertisement