மதுரை ஆதினத்துக்கு முன்ஜாமின்

சென்னை:மதுரை ஆதினத்துக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காட்டாங்கொளத்துாரில் சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மே மாதம் மதுரை ஆதினம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்துார்பேட்டை -- சேலம் ரவுண்டானா பகுதியில் அவர் வந்த கார் மீது மற்றொரு கார் மோதி நிற்காமல் சென்றது.

இது குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், 'என்னை கொல்ல சதி நடந்துள்ளது; இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம்; என் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர்; தாடி வைத்திருந்தனர்' என கூறியிருந்தார்.

இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில், மதுரை ஆதினம் பொய்யான தகவலை பரப்பியதாகக் கூறி, சென்னை வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

ஆதினத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் கோரி, மதுரை ஆதினம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி எஸ்.கார்த்திகேயன், நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement