பெண்களை காண்பித்து ரூ.200 கோடி மோசடி: சொகுசு பங்களாவில் பதுங்கியவர் கைது

மங்களூரு: கடன் பெற்றுத் தருவதாக தொழிலதிபர்களை நம்ப வைத்து, பல வசதிகள் கொண்ட சொகுசு பங்களாவில் மலேஷிய பெண்களை காண்பித்து, 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பட்டுச்சேலை தயாரிப்பு தொழில் நிறுவனம் நடத்துகிறார். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில், கடன் வாங்க திட்டமிட்டார்.
இதற்காக 2023ல் பெங்களூரில் 'பைனான்ஸ் கன்சல்டென்சி' நிறுவனம் நடத்தி வரும் விமலேஷை தொடர்பு கொண்டார். அப்போது விமலேஷ், மங்களூரின் ரோஹன் சல்டானா, 45, என்பவரை, தொழிலதிபருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தலைமறைவு
தேவையான கடன் தொகை பெற்றுத் தருவதாக நம்ப வைத்த ரோஹன், ஸ்டாம்ப் பேப்பருக்காக, தொழிலதிபரிடம் 40 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.
பணம் கொடுத்து பல நாட்களாகியும், கடன் தொகை கிடைக்கவில்லை; வாங்கிய பணத்தையும் திருப்பித்தரவில்லை. ரோஹன் சல்டானா தலைமறைவானார். மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது.
இதுகுறித்து, 2024 ஜூலையில் மங்களூரு நகர போலீஸ் நிலையத்தில் தொழிலதிபர் புகார் செய்தார். இதுபோன்று வேறு சில தொழிலதிபர்களும் புகார் அளித்தனர்.
போலீசாரும், முதலில் விமலேஷை கைது செய்து விசாரித்தனர். இவர் மூலமாக ரோஹன் சல்டானா பற்றிய விபரங்கள் தெரிய வந்தன. தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், மங்களூரு புறநகரில், ஜப்பினமொகரு என்ற இடத்தில் சொகுசு பங்களாவில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு, அந்த பங்களாவில் திடீர் சோதனை நடத்தினர். ரோஹன் சல்டானாவை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய அறைகள்
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பங்களாவை போலீசார் சோதனையிட்டதில், எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு மது பாட்டில்கள் காணப்பட்டன. ஆடம்பர அலங்கார பொருட்கள் இருந்தன. சில மலேஷிய பெண்களும் இருந்தனர்.
பங்களாவில் ரகசிய அறைகள் இருந்தன. ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்லும் வகையில் வழி இருந்தது.
ஏமாந்த தொழிலதிபர்கள் வந்தால், ரகசிய அறையில் பதுங்குவார். அவர்களும் பங்களாவில் யாரும் இல்லை என, நினைத்து திரும்பிச் செல்வர். யார் வருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள, வீடு முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருக்கிறார்.
ரோஹன் சல்டானாவிடம் விசாரித்ததில், பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. தன் வலையில் விழும் தொழிலதிபர்களை, இந்த சொகுசு பங்களாவுக்கு அழைத்து வருவார். இங்குள்ள வசதிகள், ஆடம்பர பொருட்கள், மலேஷிய பெண்களை பார்த்து ஆச்சரியமடைந்து, ரோஹனை மிகப்பெரிய தொழிலதிபர் என்றே நம்புவர்.
தொழிலதிபர்களிடம் இருந்து, தான் எதிர்பார்க்கும் பணம் கைக்கு கிடைத்ததும், மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து தலைமறைவாகி விடுவார். அந்த வகையில், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில், 45 கோடியை சுருட்டியுள்ளார்.
கர்நாடகா மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களின் தொழிலதிபர்களுக்கும், கடன் ஆசை காட்டி பணம் பெற்று மோசடி செய்துஉள்ளார்.
மோசடி செய்து சம்பாதித்த பணத்தில், ஏராளமான சொத்துகள் வாங்கி யுள்ளார். இதற்கு முன் இவர் தன் மனைவியுடன், சென்னையில் வசித்தார்.
அங்கும் பல தொழில்களை நடத்தியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவரது வங்கி கணக்கில் 40 கோடி ரூபாய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
இயந்திர நடவு மானியம் ரூ.4,000 விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும்?
-
ரயில்களில் உணவு பொருள் விற்பவர்களுக்கு கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை கட்டாயம்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது