இண்டி கூட்டணிக்கு ஆம் ஆத்மி 'குட்பை'

புதுடில்லி: காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக, ஆம் ஆத்மி கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இண்டி கூட்டணியில் இடம் பெற்றிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கைகோர்த்து டில்லியில் போட்டியிட்டது.

அதேசமயம், ஹரியானா மற்றும் டில்லி சட்டசபை தேர்தல்களில், இரு கட்சிகளும் தனித்தனியாகவே களமிறங்கின. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீஹார் சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி தனித்து களம் காணவுள்ளது.

இந்நிலையில், இண்டி கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக, ஆம் ஆத்மியின் பார்லிமென்ட் குழு தலைவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

இண்டி கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை. கட்சித் தலைவர் கெஜ்ரிவால் இதை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார். இருப்பினும், பார்லிமென்டில் தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்.

எங்களது ஆதரவு எப்போதும் அவர்களுக்கு இருக்கும். வலுவான, ஆற்றல்மிக்க எதிர்க்கட்சியாக இருப்போம். பார்லிமென்டில் மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், வரும் 21ல் துவங்குகிறது. இதையொட்டி, இண்டி கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் மூலம் இன்று நடக்கும் கூட்டத்தை ஆம் ஆத்மியும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

Advertisement