பாகிஸ்தானில் படு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதி மசூத் அசார்

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்- - இ - -முஹமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் முக்கிய பயங்கரவாத அமைப்பு ஜெய்ஷ்- - இ - -முஹமது. இந்த அமைப்பை துவங்கி, அதன் தலைவராக இருப்பவர் பயங்கரவாதி மசூத் அசார். இவரை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா., வைத்துள்ளது.

இவர், நம் நாட்டில் 2001ல் நடந்த பார்லிமென்ட் தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல் போன்றவற்றுக்கு மூளையாக செயல்பட்டவர்.

இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதியான இவர், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை அந்நாட்டு அரசு தப்பவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ, 'மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம், அவர் பாகிஸ்தானில் இருக்கும் தகவலை இந்தியா வழங்கினால், அவரை மகிழ்ச்சியுடன் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைப்போம்' என்றார்.

இந்நிலையில், பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானின் பஹவல்பூரிலிருந்து 1,000 கி.மீ., தள்ளியிருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம் மாறி உள்ளார். இந்த தகவலை அரசுக்கு உளவுத்துறை அறிக்கையாக அளித்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஸ்கார்து பகுதியில் பயங்கரவாதி மசூத் அசார் தென்பட்டார். அந்த பகுதி ஒரு முக்கிய சுற்றுலா தலம். அங்கு இரண்டு மசூதிகள், அதனுடன் தொடர்புடைய மதரசாக்கள், அரசு மற்றும் தனியார் விருந்தினர் மாளிகைகள் உள்ளன. ஸ்கார்துவில் குறிப்பாக சத்பாரா சாலை உள்ள பகுதியில் மசூத் அசார் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement