11 மாத தொகுப்பூதியத்தில் செவிலியர்கள் நியமனம் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் எதிர்ப்பு

விருதுநகர்:தமிழக அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 11 மாத தொகுப்பூதியத்தில் செவிலியர்களை நியமிப்பதற்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொது செயலாளர் சுபின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகரில் அவர் கூறியதாவது: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலம் நியமிக்கப்பட வேண்டிய செவிலியர்களை தற்போது 11 மாத தொகுப்பூதியத்தில் பணியமர்த்த இருப்பதாக தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

செவிலியர்களை தொகுப்பூதியத்தில் தொடர்ந்து நியமனம் செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 13 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த, 17 ஆயிரம் செவிலியர்கள் நிரந்தர அடிப்படையில் பணிபுரிகின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அதிக காலிப்பணியிடங்களை நிரப்பாததால், பணிச்சுமை அதிகமாகி செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் நிதி ஆயோக் அறிக்கையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக திட்டங்களை அறிவிக்கும் அரசு, அதை செயல்படுத்துவதற்கு பணியாளர்களை நியமிக்கவில்லை. இதனால் செவிலியர்கள் வீட்டிற்கு சென்ற பின்பும் ஆன்லைனில் மீட்டிங், தரவுகளை பதிவேற்றம் செய்தல் உள்பட பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

11 மாத தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்படும் செவிலியர்கள் அதிகப்படியான பணிச்சுமையால் ஓராண்டில் பணியை விட்டு வெளியேறி விடுவார்கள்.

அப்போது அந்த பணிகள் அனைத்தும் நிரந்தர செவிலியர்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகும்.

மேலும் கிரோடு 3 என்ற பதவி உயர்வை தமிழக அரசு நீக்கிவிட்டது. தற்போது கிரேடு 2, கிரேடு 1 ஆகிய பதவி உயர்வுகளும் நிரப்பப்படாமல் உள்ளது. செவிலியராக பணியில் சேர்ந்த பலர் எந்த ஒரு பதவி உயர்வும் பெறாமல் செவிலியராகவே பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வும், அதற்கான ஊதிய உயர்வு என எதுவும் வழங்கப்படுவதில்லை என்றார்.

Advertisement