முதல்வர் காப்பீட்டை ஏற்கும் மருத்துவமனைகள்: விபரம் அறிய வருகிறது மொபைல் செயலி

சென்னை: முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில், என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில், மேம்படுத்தப்பட்ட மொபைல் போன் செயலி, விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், தமிழகத்தில், 1.48 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, எட்டு உயர் சிகிச்சைகளுக்கு, 22 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இதில், 942 அரசு, 1,215 தனியார் என, 2,157 மருத்துவமனைகளில், இத்திட்டத்தின் கீழ், 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற முடியும்.
முதல்வர் மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ், அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், பல தனியார் மருத்துவமனைகளில், இதற்கான சேவை மறுக்கப்படுகிறது.
குறிப்பாக, உயிர் காக்கும் பல அறுவை சிகிச்சைகளை, முதல்வர் காப்பீடின் கீழ் செய்ய, தனியார் மருத்துவ மனைகள் முன்வருவதில்லை. இதனால், காப்பீடு திட்ட அட்டை வைத்திருந்தும், முழுமையாக பலனளிக்காத நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இதையடுத்து, அரசின் காப்பீடுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகளை அறிந்து கொள்ளும் வகையில், அந்த விபரங்களை, மொபைல் போன் செயலி வாயிலாக அளிக்க, மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் எஸ்.வினீத் கூறியதாவது:
மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வர் காப்பீடுத் திட்ட செயலியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. தகுதியான எவரும், செயலி வாயிலாகவே விண்ணப்பித்து, காப்பீடு அட்டையை, 'டிஜிட்டல்' முறையில் பெறலாம்.
அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில், எவையெல்லாம் முதல்வர் காப்பீட்டின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதை யும் அறிய முடியும். சிகிச்சை விபரங்கள் குறித்தும் தகவல் பெறலாம்.
இதைத் தவிர, பயனாளிகள் சிகிச்சை பெறும்போது, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காப்பீடு தொகை விபரங்களையும் அறியலாம். முதல்வர் காப்பீடு திட்ட சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியாக, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.







மேலும்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை