நாட்ராய சுவாமி கோவில் திருப்பணி பக்தர்களுக்கு நிர்வாகம் அழைப்பு

பொங்கலுார்: கொடுவாய் நகரின் சங்ககால பெயர் குடவாயில் கோட்டம்; அது மருவி கொடுவாய் என்றானது. நாட்ராயன் நாச்சிமுத்து மகாமுனி கோவில் கொடுவாய் அருகே செல்லப்பிள்ளை பாளையம், அய்யம்பாளையம் எல்லையில், 400 ஆண்டுகளுக்கு முன் உசிலை வனத்தில் சுயம்புவாக புற்று வடிவத்தில் தோன்றியது.

அந்த இடத்தில் மாடு மேய்க்கும் பொழுது மாடு அந்த புற்றின் மீது தானாக பால் சுரந்தது. பின் வயதான ஒருவரின் கனவில் நாட்ராயன் தோன்றி தனக்கு கோவில் எழுப்ப உத்தரவிட்டார்.

அதன்பின், அந்த இடத்தில், கோவில் கட்டி மக்கள் வழிபட்டு வந்தனர். அங்கு பச்சை தண்ணீரில் விளக்கு எரிந்தது. தேங்காய் தொட்டியில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.

குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தை வரம் வேண்டி வழிபட்டதால் அது நிறைவேறியது. செவ்வாய்க்கிழமை தோறும் நடக்கும் மஞ்சள் பூஜையில் கலந்து கொண்டால் நோய் நொடிகள் தீரும். பல நாட்கள் நடக்காத காரியத்திற்கு பூ கேட்டு வழிபட்டால் காரிய தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலை புதுப்பிக்க பொதுமக்கள் முயற்சி எடுத்தனர். கோவில் திருப்பணி நடந்து முழுமை அடையாமல் நின்று விட்டது. அது மீண்டும் துவக்கப்பட உள்ளது. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாலை, 7:00 மணி அளவில் பூஜை நடக்கிறது.

கோவில் திருப்பணி குழு பொறுப்பாளர் விஸ்வநாதன் கூறுகையில், ''கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகம் நடக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். பக்தர்கள் உதவி செய்தால் விரைவாக முடிக்க முடியும். கோவில் திருப்பணியில், கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் 9976828244, 9524376007, 8883656237 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement