40 துாய்மை நகரங்களில் மதுரைக்கு கடைசி இடம்: எம்.பி., விரக்தி

5

மதுரை: இந்தியாவில் 10 லட்சத்திற்கு மேல் மக்கள்தொகை கொண்ட 40 துாய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடமான 40 வது இடம் பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரையின் துாய்மையை பேணிக்காக தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் 2024-25 க்கான இந்தியாவின் துாய்மை நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கு மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடமான 40வது இடம் பெற்றுள்ளது. மதுரையில் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரித்தல் 37 சதவீதம், குப்பையை தரம் பிரித்தல் 26, மறுசுழற்சி செய்து கையாளும் திறன் 4, குப்பை மேடுகளை மறுசீரமைத்தல் 25 சதவீதம் என்கிற அடிப்படையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

குடியிருப்புகள், சந்தைகள், நீர்நிலைகளின் துாய்மை எனும் பிரிவுகளில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளது. பொதுக் கழிப்பிடங்கள் துாய்மையின்றி இருப்பதால் 3 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளது.

மாநில அளவில் கணக்கெடுக்கப்பட்ட 651 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை 543வது இடம் பெற்றுள்ளது. இதற்கான நெறிமுறையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மதுரையின் துாய்மை மோசம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாநகராட்சிக்கு 4 ஆண்டுகளில் 6 கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்திற்காக மக்கள் நலன் சமரசம் செய்யப்படுகிறது.

மாநகராட்சி சுயபரிசோதனை செய்து உரிய நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். மாநில நகராட்சித்துறை அமைச்சர் முன்னிலையில் மதுரையை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். துாய்மையான நகரமாக்க சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை பொறுப்பில் இருப்பவர்களுக்கே உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement