அரசு பண்ணைகளில் அதிக விலைக்கு பழச்செடிகள் விற்பனை குறைக்க கோரிக்கை
சென்னை: அரசு தோட்டக்கலை பண்ணைகளில் விற்பனை செய்யப்படும் பழச்செடிகளின் விலை அதிகமாக உள்ளது. அதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயிகள், வீட்டு தோட்டம் அமைக்கும் பொதுமக்கள் மற்றும் பண்ணை தோட்டம் அமைக்கும் சிறுதொழில் முனைவோருக்கு, தரமான காய்கறி விதைகள், நடவு செடிகள், பழமர கன்றுகளை, குறைந்த விலையில், குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக, தோட்டக்கலைத்துறை வாயிலாக, தோட்டக்கலை பண்ணை கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில், 37 மாவட்டங்களில், 73 இடங்களில், தோட்டக்கலை பண்ணைகள் உள்ளன.
ரூ.20 கோடி
இப்பண்ணைகளுக்கு காய்கறி நடவு செடிகள், நடப்பாண்டு, 20 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அரசு வழங்கும் நிதியில், பழமரச்செடிகளை உற்பத்தி செய்யும் தோட்டக்கலை துறையினர், அவற்றை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. உதாரணத்திற்கு, சேலம் கருமந்துறை பழப்பண்ணையில், அனைத்து வகை பழச்செடிகளும் கிடைப்பதால், அங்கு ஆர்வமுடன் பலரும் செல்கின்றனர்.
ஆனால் அங்கு, மா குருத்து ஒட்டு ரகம் 70 ரூபாய்; மா பக்க ஒட்டு ரகம் 80; சப்போட்டா ஒட்டு ரகம் 100; நெல்லி ஒட்டு ரகம் 50; லக்னோ கொய்யா 40; அர்கா கிரன் சிவப்பு கொய்யா செடி 45 ரூபாய் என விற்கப்படுகின்றன.
நாவல், சீதா உள்ளிட்ட பழச்செடிகள், 15 ரூபாய்க்கு கிடைக்கின்றன. விவசாயிகள் அதிகம் எதிர்பார்க்கும் பழச்செடிகள், கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், தோட்டக்கலைத் துறையினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திசை மாறுது
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது:
அரசு தோட்டக்கலை பண்ணைகளில், விவசாயிகள் விரும்பும் பழச்செடிகளை, கூடுதல் விலையில் விற்பது தொடர்கிறது. ஒரு செடியை குறைந்த விலையிலும், அதேபோன்ற பராமரிப்பில் விற்பனையாகும் மற்றொரு செடியை, கூடுதல் விலையிலும் விற்கின்றனர்.
இது குறித்து கேட்டால், தனியாரை விட குறைவாகவே விற்பனை செய்கிறோம் என்கின்றனர். மானிய விலையில் செடிகள் வழங்கப்படுவதாகவும் சொல்கின்றனர். இதனால், தோட்டக்கலை பண்ணைகள் அமைத்ததன் நோக்கம், வேறு திசை நோக்கி பயணிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோட்டக்கலைத்துறை அதிகாரி
@block_B@
ஒட்டு செடிகளில் மூன்று ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும். ஆனால், விதைகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் செடிகளில், நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாகும். மகசூல் கிடைக்காமல் போவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஒட்டு செடிகள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. தனியாரிடம் இந்த செடிகள், 150 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. தனியாருடன் ஒப்பிடும் போது, தோட்டக்கலைத்துறை குறைந்த விலையில் தான் செடிகளை விற்கிறது.block_B