திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ஆடி கிருத்திகை விழா, கோலாகலமாக நடந்தது.

திருப்போரூரில் பிரசித்திபெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் வரும் கிருத்திகை நாள், முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதுபோல, நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாரதனைகளும் சுவாமிக்கு செய்யப்பட்டன.

விழாவில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

தொடர்ந்து இரவு 7:00 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமானின் திருவீதியுலா மாடவீதிகளில் நடந்தது.

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

திருத்தணி



காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வழக்கத்திற்கு மாறாக நேற்று, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதில், 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலர், மயில் மற்றும் பால் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து, பொதுவழியில் ஏழு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Advertisement