பட்டா பெயர் மாற்ற விண்ணப்ப பதிவு திடீர் முடக்கம்: பொதுமக்கள் தவிப்பு
சென்னை: 'இ - சேவை' மையங்கள் வாயிலாக, பட்டா பெயர் மாற்றத்துக்கான விண்ணப்ப பதிவு, கடந்த சில நாட்களாக முடங்கி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவு முடிந்ததும், பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்க, வருவாய் துறை பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இதன்படி, உட்பிரிவு சர்வே எண் உருவாக்க வேண்டிய தேவை இல்லாத சொத்துக்களுக்கு, பத்திரப்பதிவு அடிப்படையில், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக உட்பிரிவு உருவாக்க வேண்டிய இனங்களுக்கும், பணிகளை விரைந்து முடிக்க, நில அளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டு வருகிறது.
இதில், எந்த வகை பட்டா மாறுதலாக இருந்தாலும், பொதுமக்கள் அதற்கான விண்ணப்பங்களை, தங்கள் பகுதியில் உள்ள, 'இ - சேவை' மையங்கள் வாயிலாக பதிவு செய்யலாம்.
இதன்படி, தமிழகத்தில் ஒவ்வொரு, 'இ -சேவை' மையத்திலும், தினசரி தலா, 20 விண்ணப்பங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, 'இ - சேவை' மையங்களில், பட்டா மாறுதல் விண்ணப்பப் பதிவு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, 'இ - சேவை' மைய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் வருவாய் உட்பட பல்வேறு துறைகளிடம் இருந்து சான்றிதழ்கள் பெற, இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் வருவாய் துறையின் அனைத்து சேவைகளும், 'இ -- டிஸ்ட்ரிக்ட்' இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.
அதன்பின், பட்டா மாறுதல் விண்ணப்பம் தவிர்த்து, மற்ற அனைத்து விண்ணப்ப பதிவு பணிகளும், 'இ - சேவை' இணையதளத்துக்கு மாற்றப்பட்டன. பட்டா மாறுதல் தொடர்பான பணிகள் மட்டும், 'இ - டிஸ்ட்ரிக்ட்' இணையதளம் வாயிலாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இவற்றை கண்காணிக்க, மாவட்டத்துக்கு இரண்டு பேர் மேலாளர்களாக நியமிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகங்களில் பணி புரிகின்றனர்.
இ - சேவை இணைய தளம் வழக்கம் போல செயல் படும் நிலையில், 'இ - டிஸ்ட்ரிக்ட்' இணைய தளத்தில், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பதிவு பணிகள் நுழைவு நிலையிலேயே தடைபடுகின்றன. இதனால், பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவிடும் பணிகள் முடங்கியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பட்டா மாறுதல் விண்ணப்ப பதிவுக்கான, 'இ - டிஸ்ட்ரிக்ட்' இணையதள சர்வரில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும் பிரச்னை சீராகும்' என்றனர்.