அகழாய்வுக்கு இணையாக நாணயவியலுக்கும் முக்கியத்துவம்: தங்கம் தென்னரசு அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை: ''அகழாய்வுக்கு இணையான முக்கியத்துவம் கல்வெட்டியல், நாணயவியலுக்கும் வழங்கப்படும்,'' என, தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மதுரையில் தொல்லியல் கழக கருத்தரங்கம் நடந்தது. இதில், கல்வெட்டு அறிஞர் ராசகோபாலின் பவளவிழா மலர் 'திசையாயிரம்' நுாலை, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு பேசியதாவது:

தொல்லியல் துறையில் சமீபகாலமாக மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய தகவல்களை கண்டறிய வேண்டும் என்ற சுய ஆர்வத்தில் இளைஞர்கள் பலர் தாமாக முன்வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

ஆபத்து நிறைந்த, உரிய வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு சென்று பானை ஓவியங்கள், சிற்பங்கள் என, பல சான்றுகளை கண்டறிந்துள்ளனர். அவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழக அரசு அகழாய்வுக்கு, 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அகழாய்வுக்கு இணையான முக்கியத்துவம் கல்வெட்டியல், நாணயவியல், அருங்காட்சியகத்திற்கும் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

தமிழகத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் செய்திகளை உலகிற்கு தெரிவிக்க, 30 லட்சம் ரூபாயில் தேசிய கருத்தரங்கு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

தமிழ் எழுத்து முறை மாற்றம் குறித்து மக்கள் அறியும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் கல்வெட்டுக்கென பிரத்யேக மியூசியம் உலக தமிழ்ச்சங்கத்தில் உருவாக்கப்படும்.

அகழாய்வுக்கு இணையான முக்கியத்துவம் கல்வெட்டியல், நாணயவியலுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'தொடர்ந்து பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு...' என பெருமாளுக்கு பெரியாழ்வார் பாடியது போல், 'கல்வெட்டு அறிஞர் ராசகோபால் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' வாழ்ந்து, கல்வெட்டியல் துறைக்கு வழிகாட்ட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தினார்.

Advertisement