இளம்பெண் கழுத்தை நெரித்து கொன்ற காதலனுக்கு வலை

திருச்சி: இரு திருமணங்கள் செய்த இளம்பெண், தன் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா, 30. இவருக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன், கஸ்பா பொய்கைபட்டியைச் சேர்ந்த கலையரசன் என்பவருடன் திருமணம் நடந்தது.

சில மாதங்களில் கணவரின் உறவினரான தினேஷ், 28, என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் வீட்டை விட்டு ஓடினர். பின், ஊருக்கு அழைத்து வரப்பட்டனர். கலையரசன், சுகன்யாவை விவாகரத்து செய்தார். வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன், 2022ல் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது; இவருடனும் வாழவில்லை. தந்தை வீட்டுக்கு திரும்பி வந்த அவர், தினேஷ் உடன் கள்ளக்காதலை தொடர்ந்தார்.

ஓராண்டுக்கு முன் சென்னை சென்ற சுகன்யா, ஒரு மொபைல் போன் கடையில் பணியாற்றினார். இந்நிலையில், தினேஷுக்கு திருமணமாகி, அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். ஆனாலும், சுகன்யாவுடன் அவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை முத்தபுடையான்பட்டி சிட்கோ வளாகத்தில் சுகன்யா, அவரது சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுகிடந்தார். மணப்பாறை போலீசார் விசாரித்தனர்.

போலீசார் கூறுகையில், 'தினேஷால் இரு கணவர்களுடனும் சுகன்யா வாழவில்லை. அதேநேரம், தினேஷ் தவிர இன்னும் பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. ஆத்திரமடைந்த தினேஷ், துப்பட்டாவில் சுகன்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, சம்பவத்தை தன் தம்பியிடம் கூறிவிட்டு மாயமாகி விட்டார்' என்றனர்.

Advertisement