விவசாயி தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை

நாட்டாகுடி: விவசாயி தலை துண்டிக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடியில் நடக்கும் நுாறு நாள் வேலை திட்ட பணிகளில் சோனைமுத்து, 58, ஈடுபட்டு வந்தார். நேற்று, இவரும், அதே ஊரை சேர்ந்த பாண்டி, 63, என்பவரும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். மதியம், 1:30 மணிக்கு, டூ-வீலரில் வந்த மர்மநபர்கள் மூன்று பேர் வாளால் சோனைமுத்துவின் தலையை துண்டித்து, படுகொலை செய்தனர்.
அருகில் இருந்த பாண்டிக்கும் வெட்டு விழுந்தது. சோனைமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு தப்பினர். காயமுற்ற பாண்டி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சோனைமுத்து தலை, சிவகங்கை, சூரக்குளம் அருகே கண்மாய் பொட்டலில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் தலையை தேடி வருகின்றனர். எதற்காக கொலை நடந்தது என, விசாரிக்கின்றனர்.