பாலியல் தொந்தரவு: இரு வார்டன்கள், 4 மாணவர்கள் கைது
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே அரசு விடுதியில், மாணவ - மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு வார்டன்கள், நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் கிராமத்தில், பெரியார் குடில் என்ற பெயரில், அரசு நிதி உதவி பெறும் உண்டு, உறைவிட பள்ளி, விடுதியுடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ - மாணவியருக்கான பள்ளியும், ஒன்று முதல் பிளஸ் 2 வரை மாணவ - மாணவியருக்கான விடுதியும் உள்ளது.
இப்பள்ளி மற்றும் விடுதியை திருச்சியை சேர்ந்த மனோகர் மனைவி சுஜாதா நிர்வகிக்கிறார். விடுதியில், 14 மாணவியர், 19 மாணவர்கள் தங்கி உள்ளனர்.
விடுதி மாணவர்களுக்கு, விடுதி வார்டன்கள் இருவர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். விடுதி வார்டன்கள், ஓராண்டுக்கும் மேலாக மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
விடுதி மாணவர் ஒருவருக்கு, 9, 10 வயதுள்ள நான்கு மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். 14 வயது மாணவர்கள் இருவர், மூன்று மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் புகார்படி, 9, 10 வயது வரை உள்ள நான்கு மாணவர்கள் மீதும், 14 வயது மாணவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், ஒரு மாணவரின் புகார்படி, விடுதி வார்டன்களான பெரம்பலுார் மாவட்டம், நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ஐயம்பெருமாள், 51, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ், 34, ஆகியோர் மீது, பெரம்பலுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
வார்டன்கள் இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மாணவர்கள் நான்கு பேரை, திருச்சி அரசு சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவான இரண்டு மாணவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் மாணவர் களிடம் தவறாக நடக்க முயன்றதாக 3 மாணவியர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.