பசுமை போர்வையை உருவாக்கும் அரிமா சங்கம்

பழநி தங்கரத அரிமா சங்கத்துடன் இணைந்து பசுமை விடியல் எனும் பெயரில் மரம் நடும் பணியை அரிமா சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

பழநி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மரக்கன்றுகள் நடும் பணிகளை பழநி தங்கரத அரிமா சங்கம் செய்து வருகிறது. விதைப்பந்துகளில் பூவரசு, நாவல், அரசமரம், வேம்பு உள்ளிட்ட மரங்களை நடுதல், பல்வேறு மரக்கன்றுகளை வனத்துறை நர்சரியில் இருந்து பெற்று நடவு செய்தல், இது தவிர பனை விதைகளை பல்வேறு பகுதிகளில் துாவ நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பணிகளில், அரிமா சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலத்திற்கு முன்பு அதிக மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.

தினமும் மரம் நடும் பணி



பாலசுப்பிரமணி, தலைவர், தங்கரத அரிமா சங்கம் : பழநி தங்கரத அரிமா சங்கம் பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது சங்க உறுப்பினர்களுடன் தினமும் மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஒட்டன்சத்திரம் வட்டம், இடையகோட்டை பகுதியில் உள்ள அரசு நர்சரி பகுதியில் மரங்களை பெற்றுள்ளோம். இதுவரை ஆயிரம் மரங்களை பெற்று பல்வேறு பகுதிகளில் நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்வரும் காலங்கள் விதைப்பந்துகள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளோம் என்றார்.

500 மரக்கன்றுகள்



சிவக்குமார், செயலர், தங்கரத அரிமா சங்கம்: பசுமை விடியல் எனும் பிரிவை உருவாக்கியுள்ளோம். இதில் அரிமா சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், தினமும் ஒரு மரக்கன்று மீதம் நட்டு பராமரித்து வருகிறோம். இலவச மரக்கன்றுகளை பெற சில நிர்வாகிகளை இணைத்து பணியாற்றி வருகிறோம்.

இதில் டி.எஸ்.பி., கேம்ப் பகுதியில் 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வழங்கியுள்ளோம். இது தவிர சங்க உறுப்பினர்களும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.

விரைவில் அதிக உறுப்பினர்களை இணைத்து இப்பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளோம்.என்றார்.

Advertisement