தலையில் கல்லை போட்டு பரோட்டா மாஸ்டர் கொலை அண்ணன், தம்பி உட்பட மூவர் கைது

மதுரை: மதுரையில் முன்பகையால் பரோட்டா மாஸ்டர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கரும்பாலை பரோட்டா மாஸ்டர் இசக்கிமுத்து 35. பட்டியல் சமூகத்தை சேர்ந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் மாற்று சமூகப்பெண் மணிமேகலையை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் வாடகை வீட்டில் தனியாக வசித்தனர். ஓராண்டுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த உதயகுமாருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் உதயகுமார் அண்ணன் பழனிக்குமார் தரப்புக்கும் இசக்கிமுத்துவுக்கும் முன்பகை இருந்தது.

மணிமேகலை அறிவுறுத்தல்படி திண்டுக்கல்லுக்கு இசக்கிமுத்து குடிபெயர்ந்தார். சில மாதங்களுக்கு முன் மீண்டும் மதுரை வந்தவர் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். உலக தமிழ்ச்சங்கம் அருகே பழனிக்குமார், உதயகுமார், அவரது நண்பர் காளிதாஸ் ஆகியோர் வழிமறித்தனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து அவரது தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்தனர். மூவரும் தப்பிய நிலையில் சம்பவ இடத்தில் இசக்கிமுத்து இறந்தார்.

அண்ணாநகர் போலீசார் சி.சி.டிவி அடிப்படையில் விசாரித்து ஆரப்பாளையம் அருகே பதுங்கியிருந்த பழனிக்குமார் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.

Advertisement