தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

9

நெல்லை: 'பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உருவான நாளில் இருந்து முதல்வரின் உருவமே மாறி விட்டது. தி.மு.க.,வினர் ஒரு பதற்றத்தில் இருக்கின்றனர்,' என்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது;பிரதமர் மோடி வரும் 26ம் தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். ரூ.350 கோடி மதிப்பிலான புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். சிலர் தமிழகத்திற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்கின்றனர். புதிய ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், விமான நிலையங்களும், விமானத் தடங்களும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். தூத்துக்குடியில் மட்டும் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.


அன்வர் ராஜா தி.மு.க.,வின் இணைந்தது குறித்து; ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி, ஒரு கட்சியில் இணைவார்கள். அதுக்கு கருத்து சொல்ல முடியாது. ஏற்கனவே அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்த போது, அதில் அங்கம் வகித்தவர் அன்வர் ராஜா. இன்று அவருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது.


பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உருவான நாளில் இருந்து முதல்வரின் உருவமே மாறி விட்டது. தி.மு.க.,வினர் ஒரு பதற்றத்தில் இருக்கின்றனர். 4 ஆண்டு காலமாக மக்களுக்கு அவர்கள் ஏதும் செய்யவில்லை. தேர்தலுக்காகத் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டதை பயன்படுத்துகிறார்கள். அரசுப் பணத்தை தேர்தலுக்காக செலவிடுவது தான் இந்த திட்டம். இதனால், தான் இந்தத் திட்டத்தை தடை பண்ணியிருப்பாங்க.


கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கரூர், தருமபுரி போன்ற இடங்களில் 10 கொலைகள் நடந்துள்ளன. ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம் ஒரு 'சேடிஸ்ட்' போன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.


சிவகங்கை அஜித்குமார் காவல் மரணத்திற்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம் தான் மூல காரணம். தேர்தல் பிரசாரம் செய்து தான் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பத் தேவையில்லை. டேவிட்சன் தேவாசிர்வாதத்தாலேயே தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.



சென்னை மாநில கல்லூரி வாசலில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தி.மு.க.,வினர் கஞ்சா, கொக்கைன் போன்ற போதை பொருட்களை விற்கச் சென்றிருப்பார்கள். தமிழகத்தில் அது தானே நடக்கிறது.


நெல்லையில் கல்லூரிகளை அதிகமாக கொண்டு வந்தேன். வானூரில் கட்டப்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பணிகள் முடிவடைந்தவுடன் முதல்வர் திறந்து வைப்பார். அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன்.


எழுச்சி பயணம் மேற்கொள்ளும் இ.பி.எஸ்.யை வரும் ஆக.,3ம் தேதி சாப்பிட வீட்டுக்கு அழைத்துள்ளேன். இன்னும் ஒரு வாரத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு யானை கொண்டு வரப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement