முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விமரிசை திருத்தணியில் 7 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

திருத்தணி,:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த ஆடி மாத கிருத்திகை விழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். மேலும், ஏழு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வழக்கத்திற்கு மாறாக நேற்று, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதில், 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலர், மயில் மற்றும் பால் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து, பொதுவழியில் ஏழு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், ஐந்து மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

 பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள பாலசுப்ரமணி சுவாமி திருக்கோவில், பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், குமரஞ்சேரி குமாரசுவாமி திருக்கோவில், மீஞ்சூர் ஏகாம்பர நாதர் கோவிலில் உள்ள ஆறுமுகசுவாமி, விடதண்டலம் பாலசுப்ரமணியர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீப ஆராதனைகள் நடந்தன.

 சுருட்டப்பள்ளி சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னிதியில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இதேபோல், தொம்பரம்பேடு மகா கால பைரவர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னிதியில் கிருத்திகை விழாவை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

@block_B@

தரிசனம்

மொரீஷியஸ் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தர்மராஜன் நாகலிங்கம், குடும்பத்துடன், காலை 8:30 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அமைச்சருக்கு முருகர் திருவுருவ படம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின், காலை 9:20 மணிக்கு புறப்பட்டு சென்றார்.block_B

Advertisement