மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை நீட்டிக்க வேண்டும்: எம்.பி., ஜோதிமணி மனு

கரூர்: 'மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை, சென்னை எழும்பூர் வரை மீண்டும் நீட்டிக்க வேண்டும்' என, கரூர் காங்.,-எம்.பி., ஜோதிமணி, சென்னையில் தெற்கு ரயில்வே மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இருந்து நாள்தோறும், இரவு கரூர், திருச்சி வழியாக சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் முதல், சென்னை தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த பராமரிப்பு காரணமாக, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரத்தில் நிறுத்தப்பட்டது. ஓராண்டு முடிந்த நிலையிலும், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையிலும், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூருக்கு இயக்கப்படுவதில்லை. தாம்பரத்தில் அதிகாலை, 3:00 மணிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படுவதால், கரூர் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, நமது நாளிதழிலும் செய்தி வெளியானது.
இதையடுத்து, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி, சென்னையில் நேற்று, தெற்கு ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் சென்னை எழும்பூர் வரை நீட்டிக்க வேண்டும்; கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் மற்றும் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

Advertisement