அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: ''சம வேலைக்கு சம ஊதியம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது,'' என, ராமநாதபுரத்தில் தமிழக செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொது செயலர் சுபின் தெரிவித்துள்ளார்.

சுபின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வின் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில், 2015ல் தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு செவிலியர்களை தேர்வு செய்தது.

அப்போது இரு ஆண்டுகளுக்கு, 7,700 ரூபாய் மாதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்; அதன் பின் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என, சிலருக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.

கடந்த, 2018ல் சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நிரந்தர செவிலியர்களின் பணிக்கு இணையாக பணி செய்யும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம், ஆறு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டது.

அதை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக, 2019ல் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கில் துறை செயலர் தலைமையில் குழு அமைத்து செவிலியர்கள் பணி குறித்து ஆராய்ந்து பணி வழங்குவதாக தெரிவித்தது.

பின், குழுவின் அறிக்கையில் உண்மை இல்லாததால் நீதிமன்றம், இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து செவிலியர்களின் பணியின் தன்மையை ஆராய உத்தரவிட்டது.

அந்த நீதிபதிகளின் அறிக்கையின் அடிப்படையில், மூன்று மாதத்தில் எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம், பணப்பலன்களை வழங்க உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத அரசு, தற்போது அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

இது முழுக்க முழுக்க சமூக நீதிக்கு எதிரானதாகும். தேர்தல் வாக்குறுதியில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தெரிவித்து விட்டு, அதற்கு நேர்மறையாக செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது.

இளமை காலத்தை மகப்பேறு விடுப்புக்களை கூட இழந்து நிற்கும் செவிலியர்களுக்கு, எட்டு ஆண்டுகள் போராடி பெற்ற வெற்றியை பறிக்க முயற்சிக்கும் இந்த நடவடிக்கை, சமூக நீதி ஆட்சி நடத்தும் இந்த அரசின் கொள்கைகளுக்கு எதிரானதாகும்.

தமிழக அரசு உடனடியாக உயர்நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றும் விதம் காலமுறை ஊதியம் வழங்கி அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement