கோலியனுார் கூட்ரோட்டில் வழிகாட்டி பலகை இன்றி வாகன ஓட்டிகள் குழப்பம்

விழுப்புரம் : கோலியனுார் கூட்ரோட்டில் வழிகாட்டி பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.

விழுப்புரம் - புதுச்சேரி செல்லும் சாலையில் கோலியனுார் கூட்ரோட்டில் புதுச்சேரி, சென்னை, பண்ருட்டி மார்க்க சாலைகள் பிரிந்து செல்கிறது. விக்கிரவாண்டி - கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளும் நடக்கிறது.

இந்த பணிகள் தற்போது வரை ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த சூழலில், கோலியனுார் கூட்ரோட்டில் இருந்து மூன்று மார்க்கங்களின் சாலைகள் பிரிந்து செல்வதால் மாற்று வழிகளில் இருந்து வெளியூருக்கு வாகனங்களில் செல்பவர்கள் திசையை காட்டும் வழிகாட்டி பலகை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் பல ஆண்டுகளுக்கு வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை சேதமடைந்து, ஊர்களின் பெயர்களும் மறைந்துள்ளது. மேலும், கோலியனுார் கூட்ரோட்டில் உள்ள 4 கண்காணிப்பு கேமராக்களும் இயங்காமல் பெயரளவுக்கு காட்சி பொருளாக உள்ளது.

இங்கு, இரவு நேரங்களில் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்துள்ளதால், போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகளின் குழப்பத்தைப் போக்க வழிகாட்டி பலகை வைப்பதோடு, கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவும், சாலையின் சென்டரில் ஹைமாஸ் விளக்கு பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement