வாலிபரை தாக்கிய 5பேர் கைது

நெட்டப்பாக்கம் : முன் விரோதத்தில் வாலிபரை தாக்கிய 5பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, பனையடிகுப்பம் சாலை அருகே உள்ள மீன் குட்டையில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் நேற்று காலை மயங்கி கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கரையாம்புத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார், அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மயங்கி கிடந்த வாலிபர் பனையடிகுப்பம் வையாபுரி நகரை சேர்ந்த ராஜகுரு, 34, என்பதும், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்பாபு, 27; என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு ராஜகுருவுக்கும், தினேஷபாபுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில்,ஆத்திரமடைந்த தினேஷ்பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த சர்மா, 24; முகிலன், 20; சுமித், 20; கரையாம்புத்துார் அச்சுதன் 24, ஆகியோர் பிளாஸ்டிக் சேர் மற்றும் உருட்டு கட்டையால் ராஜகுருவை கொடூரமாக தாக்கிவிட்டுதப்பியது தெரியவந்தது.

ராஜகுரு அண்ணன் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில்,கரையாம்புத்துார் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, தினேஷ் பாபு உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

Advertisement