ஐ.டி., நிறுவனங்களின் வருகை தொடர்கிறது..! அதிவேக பாய்ச்சலில் கோவை

3

கோவை: ஐ.டி., துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய நகரங்களுள் முதன்மையான இடத்தில் உள்ள கோவைக்கு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கிய ஐ.டி., ஹப் என்ற இலக்கை நோக்கி, கோவை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது.


கல்வி, மருத்துவம், உற்பத்தி துறைகளில் இந்தியாவில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கோவை, ஐ.டி., துறையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் இட நெரிசல், சர்வதேச நிறுவனங்களின் பார்வையை, வேறு நகரங்களை நோக்கித் திருப்பி உள்ளது.


இதமான பருவநிலை, திறன் மிகு பணியாளர்கள், அபரிமிதமான மனிதவளம் ஆகியவை கோவையை முதல் தேர்வாக வைத்திருக்கின்றன. ஏற்கனவே, கோவை ஐ.டி., துறையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.


டைடல் பார்க், எல்காட் பார்க், டைசெல் பயோடெக், கே.ஜி.ஐ.எஸ்.எல்., இண்டியா லேண்ட், ரத்தினம் டெக்ஜோன் என, ஏராளமான அரசு மற்றும் தனியார் ஐ.டி., பார்க்குகள் செயல்பட்டு வருகின்றன. எல் அண்டு டி நிறுவனம் பெரிய அளவிலான ஐ.டி., பார்க்கை நிர்மாணித்து வருகிறது.


கோவையில் சுமார் 850 ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுகின்றன. ரெஸ்பான்சிவ், டி.சி.எஸ்., காக்னிசன்ட், பாஷ் உள்ளிட்ட பன்னாட்டு ஐ.டி., நிறுவனங்கள் வரிசையில், அமெரிக்காவின் ஸ்டேட் ஸ்ட்ரீட், அவன்டோ நிறுவனங்கள் தற்போது இணைந்துள்ளன.


நிதி சார் சேவைகளில் சர்வதேச அளவில், முன்னணி நிறுவனமான ஸ்டேட் ஸ்ட்ரீட் சமீபத்தில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. நிதி சேவை மற்றும் வங்கி நிறுவனமான ஸ்டேட் ஸ்ட்ரீட், முதலீட்டு சேவைகள், முதலீட்டு மேலாண்மை சேவைகளை வழங்குகிறது.


முதலீட்டு மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம், நிதி கணக்கியல் துறைகளில் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். மேலும், உலகளவில் குறிப்பிடத்தக்க நிறுவனம் என்பதால், உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப மையமாக, கோவை உருவெடுக்க வாய்ப்புள்ளது.


அதேபோன்று, உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவனமான அவன்டோ நிறுவனமும் கோவையில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. இந்திய நிறுவனமான சி5ஐ.,யும் கோவையில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது. தொழில்நுட்பம் ஊடகம், தொலைத்தொடர்பு, மருந்து, உயிரி அறிவியல், சில்லறை வர்த்தகம், வங்கி உள்ளிட்ட துறைகளுக்கு, செயற்கை நுண்ணறிவு சேவை மற்றும் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது. பல்வேறு நாடுகளில் இந்நிறுவனத்துக்கு கிளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் கோவைக்கு வருவதன் வாயிலாக, இந்தியாவின் ஐ.டி., ஹப் என்ற பெருமையை அடைவது, வெகு தூரத்தில் இல்லை எனலாம்.

Advertisement