முட்டை விலை 20 காசு சரிவால் அதிர்ச்சி


நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 535 காசுக்கு விற்ற முட்டை விலை, 20 காசு குறைத்து, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 1ல், 575 காசாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 10ல், 20 காசு சரிந்து, 555 காசும், 12ல், மேலும், 20 காசு குறைக்கப்பட்டு, 535 காசாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. எட்டு நாட்களுக்கு பின், நேற்று, 20 காசு சரிந்து, கொள்முதல் விலை, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்நிலையில், நாமக்கல் எக் டிரேடர்ஸ் அசோசியேஷன் தலைவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவிற்குட்பட்ட அனைத்து கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை வியாபாரிகள் அனைவரும், வடமாநிலங்களில், 'ஸ்ராவண்' பண்டிகை ஆரம்பித்துள்ளதாலும், மஹாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களில் துவங்குவதாலும், மக்களிடையே முட்டை நுகர்வு குறைந்துள்ளது.


அதனால், 'நெக்' விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து கொள்முதல் செய்ய துவங்கி உள்ளனர். நாமக்கல் மண்டலத்திலும் அதிகப்படியான மைனஸ்' போவதால், பண்ணையாளர்களும், வியாபாரிகளும், 'நெக்' விலை குறைத்தாலும், குறைக்காவிட்டாலும், 485 காசிற்கு மேல் பண்ணையாளர்கள் முட்டைகளை விற்க வேண்டும். வியாபாரிகளும் அந்த விலைக்கே முட்டைகளை வாங்கி வியாபாரம் செய்யலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement