இரட்டிப்பு பணம் தருவதாக 'ஆசை' கூட்டம் போட்ட கும்பல் சுற்றிவளைப்பு

சேலம்: சேலம், குரங்குச்சாவடியில் உள்ள தனியார் ஓட்டலில், 'கிரிப்டோகரன்சி' வர்த்தக கூட்டம் நேற்று நடந்தது. கேரளம், கோவாவை சேர்ந்த கும்பல் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.



ஆனால் இது மோசடி பேர்வழி கும்பல் என அறிந்து உஷாரான, பெரம்பலுாரை சேர்ந்த கோவிந்தராஜ், 47, சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


உடனே அதன் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில், சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கூட்டம் நடத்தியவர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து, கேரளம், கோவா கும்பலை சேர்ந்த, ஹேமந்த், பாஸ்கர் உள்பட, 6 பேரை, போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கூட்டத்தில் கிரிப்டோகரன்சி எனும் தனி செயலியை அறிமுகப்படுத்தி, ஆன்லைன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 மாதங்களில், 2 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, 5 உறுப்பினர்களை சேர்த்தால், 3 லட்சம் ரூபாய் போனஸ் தொகை பெறலாம் என, ஆசை வார்த்தை கூறி துாண்டப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு, அந்த பணத்தை எடுக்காமல் இருந்தால், 1 கோடி ரூபாய் பெறலாம் என்றும், இந்த கிரிப்டோகரன்சி ஜெர்மன் நாட்டை சேர்ந்தது என்பதால், நீங்கள் செலுத்தும் தொகைக்கு, டாலராக பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலி செயலியை உருவாக்கி, ஆன்லைன் மூலம் முதலீடு பெற்று மோசடி செய்வது தெரிந்தது.

இக்கும்பல் ஏற்கனவே, திருச்சி, கோவையில், இதேபோல் கூட்டம் நடத்தி, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement