மாயனுார் ரயில்வே கேட் பழுதால் மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம், மாயனுார் ரயில்வே கேட்டில், பழுது ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், மாயனுார் கதவணை செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. இதன் வழியாக தினமும் கரூர் பகுதியில் இருந்து, திருச்சி மாவட்டம் சீலைப்பிள்ளைபுதுார் வரை மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். மேலும் தினமும் கதவணையை பார்க்க மக்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, 6:40 மணிககு மாயனுார் ரயில்வே கேட் ரயில் வரும் போது மூடப்பட்டது. ரயில் சென்ற பிறகு, திறக்கும் போது ரயில்வே கேட் லாக் ஆகி பழுது ஏற்பட்டது.
இதனால் திறக்க முடியாமல் ரயில்வே கேட் கீப்பர் சிரமப்பட்டார். இந்த பிரச்னை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நின்றன. ஒரு வழியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு போராடி, ரயில்வே கேட் லாக் திறக்கப்பட்டது. அதன் பிறகு வாகனங்கள் வரிசையாக செல்ல ஆரம்பித்தன. இதனால் மாயனுார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.