கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணி நடைபெறவில்லை என புகார் தி.மு.க., - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மனு

கம்பம்: கம்பம் நகராட்சி வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை, நகராட்சி கூட்டம் கூட்ட வலியுறுத்தி தி.மு.க.,கவுன்சிலர்கள் 12 பேர், அ.தி.மு.க கவுன்சிலர்களும் இணைந்து கமிஷனர் உமாசங்கரை சந்தித்து மனு அளித்தனர்.

கம்பம் நகராட்சியில் 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.

இதில் தி.மு.க., 24, அ.தி.மு.க. 7, காங். மற்றும் முஸ்லீம் லீக் தலா ஒரு கவுன்சிலர்களாக உள்ளனர்.

10 நாட்களுக்கு முன் ரூ.4 கோடி மதிப்பிலான ரோடு பணி துவங்கிய போது, சாக்கடை அமைத்து ரோடு அமையுங்கள் எனக் கூறி கவுன்சிலர்கள் ரோடு பணியை தடுத்து நிறுத்தினார்கள்.

அன்று முதல் இன்று வரை கவுன்சிலர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.

நேற்று மதியம் தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் நகராட்சி கமிஷனரை உமா சங்கரிடம் கடிதம் வழங்கினார்கள்.

அதில்,'3 மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள நகராட்சி கூட்டத்தை நடத்தவும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை,' அளித்தனர்.

நகராட்சி வளாகத்தில் கவுன்சிலர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக நகரில் எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை.

கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தருவதில்லை. அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. சின்னமனூர், கூடலூர் நகராட்சிகளின் ரோடு பணி முறையாக செய் கின்றனர்.

இங்கு சாக்கடை கட்டி போடச் சொன்னால் போட மறுக்கின்றனர், என்றனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ரூ.58 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்தல், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுதல், வாரச்சந்தை புதுப்பித்தல், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கவுன்சிலர்களின் அனுமதி பெற்று அவர்களின் கையெழுத்தை பெற்றே பணிகள் நடந்துள்ளது. கூட்டம் கடந்த மாதம் மட்டுமே நடை பெறவில்லை. இந்த மாதம் இன்னும் சில நாட்களில் நடத்த உள்ளோம்,' என்றனர்

நகராட்சியில் எழுந்துள்ள மோதல் ஆரோக்கியமான நிர்வாகத்திற்கு வழி வகுக்காது.

உடனடியாக இரு தரப்பினரும் பேசி, தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை சரி செய்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement