வி.ஐ.பி., வாகனங்கள் சைரன் பயன்படுத்த தடை

பெங்களூரு: கர்நாடகாவில் வி.ஐ.பி.,க்கள் செல்லும்போது, வாகனத்தில் சைரன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, மாநில டி.ஜி.பி., சலீம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, நேற்று அவர் பிறப்பித்த உத்தரவு:

வி.ஐ.பி.,க்கள் சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும்போது, சைரன் ஒலித்தபடி செல்கின்றனர். இவர்கள் சைரன் பயன்படுத்துவதற்கு, நேற்று முதல் தடை விதிக்கப்படுகிறது. பொது மக்களின் நன்மைக்காகவும், ஒலி மாசுவை கட்டுப்படுத்தவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது சாலைகளில் செல்லும்போது, திடீரென சைரன் ஒலித்தால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு ஏற்படும். சைரன் பயன்படுத்துவதால், மெய்க்காவல் வாகனம் குறுக்கும், நெடுக்குமாக ஓடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அது மட்டுமின்றி, வி.ஐ.பி.,க்கள் எந்த சாலையில் பயணம் செய்கின்றனர் என்ற தகவலை, சமூக விரோதிகள் தெரிந்து கொள்வர். இது சம்பந்தப்பட்ட வி.ஐ.பி.,க்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம். எனவே அவர்கள் வாகனத்தில் பயணம் செய்யும்போது, சைரன் பயன்படுத்த கூடாது.

வி.ஐ.பி.,க்களின் பயணம் குறித்து, ஒயர்லெஸ் கம்யூனிகேஷன் வழியாக, தகவலை பகிர்ந்து கொள்வது நல்லது. அவசர சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை வாகனங்களில் மட்டுமே, சைரன் பயன்படுத்த வேண்டும்.

போலீஸ் துறை வாகனங்களும் சைரன் பயன்படுத்த கூடாது. அவசர சேவை வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்களில் பயன்படுத்தினால், மோட்டார் வாகன சட்டப்படி, அபராதத்துடன், மூன்று மாதம் சிறை தண்டனையும் விதிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement