முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு

விழுப்புரம் : தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுதும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லுாரி மாணவ, மணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 53 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 14 வகையான போட்டிகள் உட்பட 67 போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் https://cmtrophy.sdat.in/, https://sdat.tn.gov.in மூலம் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் விபரங்களை பதியலாம்.

இதற்கான பதிவு, கடந்த 17ம் தேதி துவங்கியது. இதில், பள்ளியில், 12 வயது முதல் 19 வயது வரை தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கிரிக் கெட், கால்பந்து, வலைகோல் பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைபந்து, கையுந்து பந்து, கைப்பந்து, கேரம், செஸ், கோ கோ ஆகிய விளையாட்டு நடக்கிறது.

கல்லுாரி அளவில் 17 முதல் 25 வயது வரை தடகளம், இறகு பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசை பந்து, கை யுந்து பந்து, கைப்பந்து, கேரம், செஸ், பூப்பந்து நடக்கிறது.

மாற்றுத்திறனாளி (வயது வரம்பில்லை) பிரிவில், தடகளம், இறகு பந்து, வீல்சேர் பந்து, மேசை பந்து, பார்வைதிறன் மாற்றுத்திறனாளி தடகளம், வாலிபால், மனவளர்ச்சி குன்றியோர் தடகளம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளி தடகளம், கபடி, பெருமூளை வாத மாற்றுத்திறனாளி தடகளம், கால்பந்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

பொதுப்பிரிவு 15 வயது முதல் 35 வயது வரை தடகளம், கிரிக்கெட், கையுந்து பந்து, கால்பந்து, கேரம், சிலம்பம், இறகு பந்து, கபடியிலும், இ-ஸ்போர்ட்ஸ் பொதுப்பிரிவு 15 வயது முதல் 35 வயது வரை இ-செஸ், ஸ்ட்ரீட் பைட்டர், இ-கால்பந்து, போக்மேன் யூனிட்டி, அரசு ஊழியர் பிரிவில் (வயது வரம்பில்லை) தடகளம், இறகு பந்து, செஸ், கபடி, கையுந்து பந்து, கேரம் போட்டிகள் நடக்கிறது.

போட்டிகள் தொடர்பான பிற விபரங்களை, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement