ரூ.199 கோடி வரி பாக்கி: காங்கிரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடில்லி: ரூ.199 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2018 ம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் டிச.,31ம் தேதி முடிந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 2019 ம் ஆண்டு பிப்.,2 ல் கணக்கை தாக்கல் செய்ததுடன், வருமானம் கிடைக்கவில்லை. ரூ.199.15 கோடிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறியது.
அதே ஆண்டில் செப்., 19ல் இந்த மனுவை வருமானவரித்துறை அதிகாரி ஆய்வு செய்த போது , ரூ.14.49 லட்சம் நன்கொடையை பணமாக பெற்றதுடன், ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் நன்கொடை அளிப்பவர்கள் டிடி அல்லது செக் மூலம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற விதியை மீறி பணமாக பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து காங்கிரஸ் வாங்கிய நன்கொடை முழுவதுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதும், காங்கிரஸ் கேட்ட வருமான வரி விலக்கை தள்ளுபடி செய்து 2021ம் ஆண்டு வருமானவரித்துறை உத்தரவிட்டது. 2023ம் ஆண்டு வருமான வரித்துறை(மேல்முறையீடு) கமிஷனர், இந்த உத்தரவை உறுதி செய்தார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ் , வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இங்கும் காங்கிரஸ் கட்சிக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. விலக்கு அளிக்க கோருவதற்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.



