விளைந்த கரும்புகளை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு; முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பெயர் மாற்றம்

மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி தாலுகாக்களில் மல்லாங்கிணறு, கட்டனூர், மறைகுளம், முக்குளம், திருச்சுழி, காரியாபட்டி, பரளச்சி உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 800 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர்.

கரும்பு அறுவடை செய்தபின் மதுரை அருகே அலங்காநல்லூர் அரசு சர்க்கரை ஆலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வர். இந்த ஆலை 2020 ல், மூடப்பட்டது. இதனால் கரும்புகளை விற்க முடியாமல் திணறிய விவசாயிகள் சிவகங்கை மாவட்ட தனியார் ஆலைக்கு கொண்டு சென்று விற்று வந்தனர். 4 ஆண்டுகளாக பிரச்சனை இல்லாமல் கரும்புகளை விற்று வந்த விவசாயிகளுக்கு அதிகாரிகள் மூலம் பிரச்சனை வரத் துவங்கியது.

அறுவடை செய்த கரும்புகளை தஞ்சாவூரில் உள்ள அரசு சர்க்கரை ஆலைக்கு எடுத்து சென்று விற்க வேண்டும் என அதிகாரிகள் விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். வேறு வழியில்லாமல் விவசாயிகள் அங்கு கரும்புகளை கொண்டு சென்றனர். ஆனால் விவசாயிகளின் கணக்கில் ஆலை நிர்வாகம் முறையான பணம் செலுத்தாததால் அரசு ஆலைக்கு கரும்புகளை கொண்டு செல்வதில் தயக்கம் காட்டினர்.

மேலும், இந்தப் பகுதியில் இருந்து சுமார் 230 கி.மீ., தொலைவில் தஞ்சாவூரில் அரசு ஆலை உள்ளது. இங்கு கரும்புகளை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து சாலை மரைகுளத்தை சேர்ந்த கரும்பு விவசாயி ரவிச்சந்திரன்: அரசு ஆலைக்கு கரும்புகள் கொடுப்பதுதான் விவசாயிகள் விருப்பமாக உள்ளது. மேலும் அரசு கரும்பிற்கு மானியம் தருகிறது. இருப்பினும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. வேறு வழியில்லாமல் எங்கள் பகுதிக்கு அருகே உள்ள சிவகங்கை தனியார் கரும்பு ஆலைக்கு கொண்டு சென்றாலும் அதிகாரிகள் தடுக்கின்றனர். தஞ்சாவூரில் உள்ள அரசு ஆலைக்குத்தான் கரும்புகளை கொண்டு செல்ல வேண்டும் என எங்களை வற்புறுத்துகின்றனர். அழுத்தம் தருகின்றனர்.

எங்களுக்கு அரசு மானியம் வேண்டாம் எங்கள் இஷ்டப்படி கரும்புகளை விற்றுக் கொள்கிறோம். என்றாலும் எங்களை விடுவதில்லை. அலங்காநல்லூர் அரசு சர்க்கரை ஆலை மூடிய பிறகு இந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளை அரசு கண்டு கொள்ளவில்லை. நாங்கள் தனியார் கரும்பு ஆலைக்கு கரும்புகளை கொண்டு செல்லும் போது எங்களை தடுக் கின்றனர். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறந்தால் அங்கு தான் கரும்புகளை கொண்டு செல்வோம். அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும். அரசு கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, எங்களுக்கு தொந்தரவு தரக்கூடாது.

ராம்பாண்டியன், மாவட்டத் தலைவர் விவசாயிகள் கூட்டமைப்பு: கரும்பு விவசாயிகளை அரசு வஞ்சிக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சிவகங்கை தனியார் ஆலைக்கு கரும்புகளை விற்க கொண்டு செல்லும் விவசாயிகளை தடுப்பதுடன், தஞ்சாவூரில் உள்ள அரசு ஆலைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகளை தொல்லை செய்வதால், கரும்பு விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். கரும்பை விட்டு மாற்று பயிராக ஏதாவது ஒன்றை பயிரிடலாமா என்ற யோசனையில் உள்ளனர். அலங்காநல்லூர் அரசு ஆலையை விரைவில் அரசு திறக்காவிடில், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஆகஸ்ட்டில் போராட்டம் நடத்தப்படும்.

Advertisement