பீஹாரில் 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்; தேர்தல் கமிஷன் நடவடிக்கை

பாட்னா: பீஹாரில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது, 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணி வரும் ஜூலை 25ம் தேதி உடன் நிறைவு பெற உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது, இதுவரை 18 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
51 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1ம் தேதி வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் அனைத்து தகுதி உள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமை. முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. முக்கியமாக, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை புதிய வாக்காளர்கள் தொடர்ந்து சேர்க்கப்படலாம்.
வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கும், சரி செய்வதற்கும் போதுமான நேரம் இருக்கிறது. வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி வெளிப் படையானதாக இருக்கும். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.







