அயர்லாந்தில் இந்தியர் மீது தாக்குதல்: மர்ம நபர்கள் அட்டூழியம்

டப்ளின்: அயர்லாந்தில் 40 வயதான இந்தியர் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதுடன், அவரது ஆடையை களைந்து கொடுமைப்படுத்தினர்.
அயர்லாந்தின் டப்ளினின் தலாக்ட் நகரில் நடந்த இந்தச் சம்பவத்தில் அவரின், முகம், கை மற்றும் கால்களில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக இந்தியத் தூதர் அகிலேஷ் மிஸ்ரா கூறியதாவது: சம்பவத்தை குற்றச்சாட்டு மட்டுமே எனக் கூறுகின்றனர். பிறகு காயம் மற்றும் ரத்தக்கசிவு எப்படி ஏற்படும். பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு மற்றும் உதவி அளித்த அயர்லாந்து மக்கள் மற்றும் போலீசாருக்கு நன்றி. குற்றவாளி நீதி முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரை சந்தித்து நலம் விசாரித்த பிறகு நிருபர்களிடம் பேசிய அப்பகுதி கவுன்சிலர் பேபி கூறியதாவது: பாதிக்கப்பட்ட நபர், மூன்று வாரங்களுக்கு முன்பு தான் இங்கு வந்துள்ளார். தாக்குதல் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் எதுவும் பேச முடியவில்லை. பார்வையாளரை சந்திக்க விரும்பவில்லை எனக்கூறியுள்ளார்.
இனவெறி ரீதியில் இந்தத் தாக்குதல் நடந்ததா என்ற கோணத்தில் விசாரித்து வரும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



