டென்னிஸ்: அரையிறுதியில் வைஷ்ணவி * பல்கலை., விளையாட்டில் அபாரம்

ரினே--ருஹ்ர்: ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 90 பல்கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் 20 வயது வீராங்கனை வைஷ்ணவி, ஜெர்மனியின் சினா ஹெர்மானை எதிர்கொண்டார். இதில் வைஷ்ணவி, 6-1, 6-4 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வா ஜோடி, 6-2, 7-5 என அமெரிக்காவின் ஒலிவியா, ஜெர்ரி ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மான் கேஷர்வானி, 6-2, 5-7, 4-10 என தாய்லாந்தின் ஸ்ரீராட்டிடம் தோல்வியடைந்தார்.
அபிநயா கலக்கல்
பெண்களுக்கான 100 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் அபிநயா (தமிழகம்), 5வது தகுதிச்சுற்றில் களமிறங்கினார். இவர் 11.88 வினாடி நேரத்தில் வந்து 2வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் அபிமன்யு, 52.85 மீ., துாரம் எறிந்து 12வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
பெண்கள் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஆன்சி சோஜன் (6.20 மீ.,), 10 வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார்.
தடகள வீராங்கனைகள் 'ஷாக்'
இந்திய அணி நிர்வாகம் முறையாக வீரர், வீராங்கனைகள் பெயர்களை பதிவு செய்யாததால் பலர், போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. பாட்மின்டன் கலப்பு அணியில் 6 பெயர்கள் விடுபட்டன.
தற்போது சீமா (10,000 மீ.,) தேவ்யாணி (400 மீ.,) என இருவரும் தடகளத்தில் களமிறங்க முடியாமல் போனது. இந்திய வீராங்கனை தேவ்யாணிபா கூறுகையில்,'' ரூ. 2 லட்சம் நுழைவுக்கட்டணம் செலுத்தி, தேசத்திற்காக களமிறங்க காத்திருந்தேன். கடைசி நேரத்தில் எனது பெயரை பதிவு செய்யாதது தெரியவந்த போது இதயம் நொறுங்கியது. இது எனது விளையாட்டு வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். யார் இதற்கு பொறுப்பேற்பது,'' என்றார்.