பணிவான சேவகனாக பணியாற்றுவேன்: ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி உறுதி

சென்னை:''சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக மட்டுமில்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றுவேன்,'' என, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா கூறினார்.


சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், நேற்று காலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வரவேற்றார்.



பாதுகாப்பு சட்டம் தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோர் பேசுகையில், 'ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர காரணமாக இருந்த தலைமை நீதிபதி வழியாக, தமிழகத்திலும் அந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.



'எங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறோம்' என்றனர்.

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ஏற்புரை ஆற்றி பேசியதாவது:





சென்னை உயர் நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படும் நீதிபதிகளையும், துணிச்சலான வழக்கறிஞர்களையும் தந்துள்ளது. இந்த நீதிமன்றம் ஜனநாயகத்திலும், நீதியின் ஆட்சியிலும், முக்கிய துாணாக விளங்கி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் சாவியை, 1892ல் பெற்றுக்கொண்ட, அப்போதைய தலைமை நீதிபதி, 'எந்த பாகுபாடும் இல்லாமல் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும்' என்று, குறிப்பிட்டார்.



அந்த மரபை உறுதி செய்யும் வகையில், இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல், நீதிமன்றத்தின் மாண்பை காப்பதற்கு, ஒரு சேவகனாக பணியாற்றி, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

மக்களின் உரிமைகளை பாதுகாக்க, திறமையான வெளிப்படை தன்மையுடன் நீதி நிர்வாகம் நடத்தப்படும். வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி என்.எஸ்.ரேவதி, லா அசோசியேசன் தலைவர் செல்வராஜ் உட்பட பலர், புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.

வழியனுப்பு விழா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், மத்திய பிரதேசம் உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி பட்டு தேவானந்த், ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில், நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

விழாவில் பிரிவு உபசார உரை நிகழ்த்திய அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''15 ஆண்டுகளாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

கடந்த ஏழு மாதங்களில், 12 நீதிபதிகள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது இரண்டு நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் எண்ணிக்கை, 56 ஆக குறைந்துள்ளது,'' என்றார்.

நீதிபதி விவேக் குமார் சிங் பேசுகையில், ''இந்த இடமாற்றத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. எதற்காக அலகாபாதில் இருந்து சென்னைக்கு இடம் மாற்றம் செய்தனர் என்பதும் தெரியாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியது, வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நல்ல நினைவுகளுடன் மத்திய பிரதேசம் செல்கிறேன்,'' என்றார்.

நீதி பதி பட்டு தேவானந்த் பேசியதாவது:

ஊழல், வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டது போன்றவற்றால் தான், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்று எண்ணக்கூடாது. நல்ல நீதி நிர்வாகத்துக்காக இடமாற்றம் செய்யப்படுவதும் உண்டு.


இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் பலர், பின்னாளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.



செ ன்னை உயர் நீதிமன்றத்தில், அச்சமும் ஒருதலைப் பட்சமும் இல்லாமல், பணியாற்றி உள்ளேன். மீண்டும் சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு இடமாற்றம் செய்திருப்பதற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement