ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

சென்னை: விரைவு ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர்.

வெளிமாநிலத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயிலில் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எழும்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் நிலையத்தின் 7வது நடைமேடைக்கு மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து எழும்பூர் வழியாக திருச்சிக்கு செல்லும் விரைவு ரயில் வந்தது.

இந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணியர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை மறித்து, அவரிடம் பேசியபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

தொடர்ந்து, அவரது டிராலி பையை வாங்கி, திறந்து பார்த்த போது, அதில் 10 உலர்ந்த கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. 20 கிலோ எடை கொண்ட கஞ்சாவின் மதிப்பு 10 லட்சம் ரூபாயாகும்.

தொடர் விசாரணையில், அவர் திரிபுரா மாநிலம் செப்பாஹிஜாலு, ஊர்மாய் பகுதியைச் சேர்ந்த சாஹின் மியா, 28, எனவும் ஹவுராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரையும், கஞ்சா பொட்டலங்களையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

Advertisement