ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை நம்பகமான ஆவணங்களாக கருத முடியாது: தேர்தல் ஆணையம்

15

புதுடில்லி: 'ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை வெறுமனே அடையாள சான்றாக மட்டுமே கருத முடியும்: அவை நம்பகமான ஆவணங்கள் அல்ல' என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


பீஹாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:


வாக்காளர் பட்டியலில் உள்ள, தகுதியற்ற நபர்களின் பெயர்களை நீக்கவே, சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஓட்டளிக்க குடியுரிமை, வயது, இருப்பிட சான்று அவசியம். அந்த சான்றுகள் இல்லாதவர்கள் ஓட்டளிக்க தகுதியற்றவர்கள்.




ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை, தீவிர வாக்காளர் திருத்த பட்டியலுக்கான ஆவணங்களில் சேர்க்க முடியாது. அவற்றை வெறுமனே அடையாள சான்றாக மட்டுமே கருத முடியும்.



ஆதார் என்பது குடியுரிமை பெற்றதற்கான ஆதாரம் அல்ல. மேலும், பலர் முறைகேடாக ரேஷன் கார்டுகள் பெற்றுள்ளனர். எனவே, அவற்றையும், வாக்காளர் அடையாள அட்டையையும் நம்பகமான ஆவணமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.



தேர்தலில் முறைகேடுகளை தடுக்கவே, தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாக்காளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டாலும், பீஹார் தேர்தல் வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு வாய்ப்பு தரப்படும் என்றும், தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இவ்வழக்கு வரும், 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Advertisement