மோசடியில் இது புதுசு: போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது

காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த நபரை காசியாபாத் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது;
காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி தூதரக அலுவலகத்தை ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவர் நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட ஜெயினும் அதே பகுதியில் தான் வசித்து வந்துள்ளார்.
வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லண்டனியா என்ற யாருக்கும் பெயர் தெரியாத நாடுகளின் தூதராக இருப்பதாக நடித்து வந்துள்ளார். மேலும், சொகுசு கார்களிலும் தூதர அதிகாரிகள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் இருப்பது போன்று போட்டோக்களை மார்பிங் செய்து வைத்துள்ளார்.
அவரிடம் இருந்து ரூ.44 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுடன் கூடிய 4 கார்கள், பாஸ்போர்ட்கள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சீலுடன் கூடிய போலி ஆவணங்கள், போலி பான் கார்டுகள், பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் 34 போலி சீல் கட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறியும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பரிமாற்றம் செய்தும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் சம்பாதித்து வந்துள்ளார்.இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.











