சசி தரூர் - முரளீதரன் மோதல் முற்றுகிறது

3

புதுடில்லி : 'சசி தரூரை கட்சி நிகழ்ச்சிக்கு அழைக்க மாட்டோம்' என, கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே.முரளீதரன் கூறிய நிலையில், “இது போல கருத்து தெரிவிப்பவர்கள் கட்சியில் என்ன பொறுப்பில் உள்ளனர்? முதலில் யார் அவர்கள்?” என, அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பினார்.


காங்., மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர், சமீப காலமாக, கட்சிக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்.


இ து, காங்., நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கேரளாவில் உள்ள காங்., நிர்வாகிகள் சசி தரூர் மீது கடுப்பில் உள்ளனர்.


சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள காங்., மூத்த தலைவர் கே.முரளீதரன், 'தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை, சசி தரூரை கட்சி நிகழ்ச்சிக்கு அழைக்க மாட்டோம். அவரை காங்கிரஸ்காரராக கருத மாட்டோம்' என்றார்.




இது தொடர்பாக, டில்லியில் நேற்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், “இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பவர்கள், கட்சியில் என்ன பதவியில் இருக்கின்றனர்? முதலில் யார் அவர்கள்? இப்படி பேச, ஏதாவது அடிப்படை காரணம் இருக்க வேண்டும். மற்றவர்களின் நடத்தை குறித்து நான் பதிலளிக்க முடியாது,” என்றார்.

கேரளாவில் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சசி தரூர் - மாநில காங்., நிர்வாகிகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement