பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்

18


சென்னை: ''இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு யாரோ சொல்லித் தருகிறார்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவை பாஜ விழுங்கி செரித்துவிடும் என்று திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புடன், கவலையுடன் சுட்டிக்காட்டியது. அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சுட்டிக்காட்டியது. ஆனால் அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என இபிஎஸ் கூறியுள்ளார்.

அவருக்கு இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித்தருகிறார்கள் என்று கருதுகிறேன். அவராகவே இந்த கருத்தை சொல்வதாக என்னால் ஏற்க முடியவில்லை. அதிமுகவுக்கு எதிராக நான் பேசுவதாக அவர் நினைக்கிறார் என்று கருதுகிறேன்.

அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்பதை நன்கு கட்டாயம் உணர்வார்கள். இபிஎஸ்ம் உணர்வார். ஆனால், சேராத இடந்தனில் சேர்ந்திருக்கிற சூழலில், அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று கருதுகிறேன் அப்படி பேசினால், நான் கவலைப்படுவதற்கு ஏதும் இல்லை.

2001ல் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓரிரு பொதுத்தேர்தலை விட அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ந்து மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று இருக்கிறது. வளர்ச்சி அடைந்துள்ளதே தவிர வீழ்ச்சி அடையவில்லை. எனவே இபிஎஸ் திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.

திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜவின் கொள்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிதொடர்ந்து எதிர்க்கும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement