மானிய உரத்துடன் பிற பொருட்களை விற்றால் நடவடிக்கை: வேளாண் இயக்குநர்

மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் போது, கட்டாயப்படுத்தி பிற பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனை நிலையங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் உரத்துடன், இடு பொருட்கள் மற்றும் பிற ஆர்கானிக் உரங்கள், கரைசல்களை கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மானிய விலையில் வழங்கப்படும் உரங்களுடன், விவசாயிகளை கட்டாயப்படுத்தி பிற இடுபொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உர உற்பத்தி நிறுவனம், இறக்குமதியாளர்கள், உர மொத்த விற்பனையாளர், சில்லரை விற்பனையாளர்களுக்கு, மத்திய அரசு, பிப்., மாதத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதற்கு பின்னரும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உரங்களுடன், கட்டாயப்படுத்தி பிற பொருட்களை விற்பனை செய்வதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.


'இதுபோல செய்தால் அந்நிறுவனங்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக வேளாண்மை இயக்குநர் முருகேஷ் எச்சரிக்கை செய்து, உர விற்பனை நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


-- நமது நிருபர் -

Advertisement