மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

கோவை:
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்காதது தொடர்பாக விளக்கம் கேட்டு, மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், குடிநீர் வினியோகிப்பாளர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.770 வழங்கக் கோரி, நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் அத்தொகை வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.

கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச தினக்கூலி வழங்காதது தொடர்பாக, கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புசார்பில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சமீபத்தில் முறையிடப்பட்டது. இம்மனுவை ஏற்ற ஆணையம், இந்திய அரசியலமைப்பு சட்டம் 338வது பிரிவின் கீழ் விசாரணைக்கு எடுத்திருக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், ஆணையத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என, தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisement